Jurisprudence
About Lesson

Lesson 7 : Kelsen’s Pure Theory of Law  – தூய கொள்கை
by Azaam Ameer (Last Updated : 15 Dec 2022)



    1. புலனறிவாத சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஜெர்மனிய சட்டவியலாளரான ஹாண்ஸ் கெல்சன் சட்டம், ஒழுக்கவியலில் இருந்து மட்டுமின்றி; வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் போன்ற ஏனைய சட்டம் சாரா விடயங்களில் இருந்து வேறு பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்றார்.
    2. கெல்சனின் இந்த தூய சட்டக்கொள்கை மெக்சிக்கோ உட்பட பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர் ஒஸ்ரியாவின் அரசியலமைப்பையும், ஐ.நா.ச பட்டயத்தின் வழிகாட்டியையும் வரைந்தவராவார்.
    3. சட்டத்தை ஒஸ்டின் கட்டளை (Command) என்பது போல, ஹார்ட் விதி (Rule) என்பது போல கெல்ஸன் நியமம் (Norm) என்கிறார்.
    4. உதரணமாக, திருடினால் கைது செய்யபட வேண்டும் என்ற நியமம் காணப்படுகிறது, கைது செய்யபட்டால் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற நியமம் காணப்படுகிறது, நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டால் வழக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்பட வேண்டும் என்ற நியமம் காணப்படுகிறது, வழக்கு நடவடிக்கைகளில் குற்றவாளியாக காணப்பட்டால் சிறைக்கு அனுப்பும் நியமம் காணப்படுகிறது. எனவே நியமம் என்பது ஒரு விடயம் நடைபெற்றால், அது எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்கிற விடயங்களின் தொகுப்பு ஆகும்.
    5. எனவே கொல்சனின் கோட்பாட்டின் படி சட்டதிட்டங்கள் (Rules and Regulations ) யாவும் அவ் விடயத்தில் எதிர்பார்க்கபடும் நியமத்தை (Norm) நடைமுறைப்படுத்த ஏற்படுத்தபட்டவைகளாகும்.
    6. இவ் எதிர்பார்கபடும் நியமங்கள் விஞ்ஞான ரீதியில் நிச்சயம் நடைபெறுவது போல் சட்டத்தில் நடைபெறும் என்று கூற முடியாது. (உ.ம் : விஞ்ஞானத்தில் நெருப்பில் கை வத்தால் சுடுபட்டு காயம் ஏற்படும் என்பது நிச்சயமாக நடைபெறும். சட்டத்தில் திருடியவன் சிறை செல்ல வேண்டும் என்ற நியமம் காணப்பட்டாலும் நிச்சயம் அவ்வாறு நடைபெறும் என்று கூற முடியாது)
    7. கெல்ஸனின் கொள்கைப்படி நெறிமுறை (Moral) என்பது நியமமான மனித நடத்தைக் கோலம்(Standard Human Behaviour). சட்ட நியமம் (Legal Norm) என்பது (அந் நடத்தைக்காக) எவ்வாறு சட்டம் இருக்க வேண்டும் (Ought to be)  என்பதாகும்.  சட்ட விதி (Legal Rule) என்பது இயற்றபட்ட சட்டத்தில் அது எவ்வாறு காணப்படுகிறது என்பதாகும்.
    8. ஒவ்வொரு நியமமும் இன்னொரு நியமத்தை அடியொட்டி வந்திருக்கும். இதில் அதி உச்சத்தில் இருக்கும் நியமம்  “கிறன்நோம்”  (Grundnorm) என்று அழைக்கப்படும். (உ.ம்: ஒழுங்கு விதிகள் நியதிச் சட்டத்தில் இருந்தும் நியதிச் சட்டங்கள் அரசியலமைபில் இருந்தும் வந்திருகும். அவ் அரசிலமைப்பு ஏதோ ஒரு அடிப்படையில் உதாரணமாக முன்னைய அரசியலமைப்பில் இருந்து வந்திருக்கும். எனவே ஆரம்பத்தில் தோன்றிய அரசியலமைப்பை “கிறன்நோம்” எனலாம்)
    9. ஒவ்வொரு நியமமும் அதற்கு மேல் உள்ள அதற்கு மேல் உள்ள நியமத்தில் தங்கியிருக்கும் (வலிதுடமை பெறும்) ஆனால் “கிறன்நோம்” அவ்வாறு வேறு எதிலிருந்தும் வலிதுடமை பெறுவதில்லை. அது அதற்கு பெருமளவான மக்கள் அதனை ஏற்று நடப்பதால் வலிதுடமை பெறும். (மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை). அவ்வாறு பெருவாரியான மக்கள் “கிறன்நோம்” யை ஏற்றுக்கொள்வதை நிறுத்தும் போது அது அடைப்படை நியமம் என்ற தகுதியை இழக்க்கும். அச் சந்தர்பத்தில் வேறு “கிறன்நோம்” பிரதியீடு செய்யப்படலாம்.
    10. நியமங்கள் பிரமிட் போன்று காணப்படும். அதாவது அடிப்படை நியமம் (Basic Norm) –  “கிறன்நோம்” , இரண்டாம் நிலை நியமம் (Secondary Norm) – ஒவ்வொரு விடயத்தின் நடத்தைகள் வரையறுக்கப்படும்,  முதன் நிலை நியமம் (Primary Norm) – தண்டனைகள், அலுவலர்களுக்கான கட்டளைகள் காணப்படும்.
    11. உதாரணமாக இலங்கையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் வண்டி செலுத்துவதற்கான தண்டனை 2011 ஆம் ஆண்டின் 1722/27 இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மோட்டார் வாகன ஒழுங்கு விதிக்கு அமைவாக தீர்மானிக்கபாடும். அம் மோட்டார் வாகன ஒழுங்கு விதி 2009 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 237 இற்க்கு அமைவாக தாபிக்கப்பட்டதாகும். மோட்டார் வாகனச் சட்டம் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிரிவு 75 இற்கு அமைவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதாகும். 1978ஆம் ஆணடின் அரசியலமைப்பு 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு பிரிவு 47 இற்கு அமைவாக தோற்றம் பெற்றதாகும். 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அதற்கு முன்பிருந்த சோல்பரி யாப்பில் இருந்து தொற்றம் பெறவில்லை என்பதனாலும் 1972 ஆண்டின் அரசியலமைப்பை அமைப்பதற்க்கு மக்கள் ஆணை இருந்ததாலும் அதை மக்கள் ஏற்று நடந்ததாலும் கிறன்நோம் ஆக 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பை கூறலாம்.
    12. கிறன்நோம் பரவலாக பின்பற்றப்பட்டலே அது வினைத்திறனானதாக அமையும். வினைத்திறனான கிறன்நோமிற்கான அவசிய நிபந்தனையாகும். இருப்பினும் அதன் வலிதுடமைக்கு சமூகத்தின் ஒரு பகுதியினர் ஏற்றுகொண்டாலே போதுமானதாகும். உதாரணமாக 1972ம் ஆண்டின் அரசியல் அமைப்பு அதற்க்கு முன்பு இருந்த சோல்பரி அரசியலமைப்பை அடியொட்டி ஏற்படுத்தப் படவில்லை என்ற நிலையில், அதை தமிழ் அரசியல் கட்சிகளும், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்த போதும், அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அதை மக்கள் பரவலாக ஏற்றுப் பின்பற்றியதும், எதிர்த்த பாராளு மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அதன் அடிப்படையில் சத்தியபிரமானம் செய்ததும், நீதித்துறை, முப்படைகள், பொதுச் சேவை ஊழியர்கள் சத்தியப்பிரமாணம் செய்து அதன் அடிப்படையில் ஒழுகி நடந்ததும் 1972ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு கெல்சனின் கிறன்நோம் கோட்பாட்டிற்க்கு ஒத்ததாக காணப்படுகிறது.
    13. முக்கியமான கிறன்நோம் இற்கு வலிதுடமை அவசியம் அல்ல. (அதாவது முன்னைய கிறன்நோம் யை அடியொட்டி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை). ஆனால், பரவலாக ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்ற வினைத்திறன் தேவைப்படுத்தப்படும்.
    14. புரட்சிகளின் போது பழைய கிறன்நோம் வலுவிழந்து புதிய கிறன்நோம் தோற்றம் பெறும். உதாரணம் பாகிஸ்த்தான், உகண்டா, கானா, நைஜீரியா
      1. State v Dosso – பாகிஸ்தானில் புரட்சி மூலம் இராணுவ ஆட்சி பழைய அரசியல் அமைப்பை இல்லாதொழித்தது மட்டுமல்லாமால், புதியதொன்றைத் தோற்றுவித்துள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
      2. Uganda v. commissioner of Prisons  – இவ்வழக்கில் 1966 ஆண்டு உகண்டா பிரதம மந்திரி நாடில் உள்ள சகல அதிகாரங்களையும் தான் கையகபடுத்தி உள்ளதாக கூறப்பட்டது தொடர்பில் தீர்பளிக்கையில், வெற்றிகடமான புரட்சி மூலம் 1962 ஆம் ஆண்டின் அரசியலபைப்பு இல்லாதாக்கபட்டுள்ளதால் 1966 ஆண்டின் அரசியலமைப்பு வலிதுடமையானது என தீர்பளிக்கப்பட்டது.
      3. Madzimbamuto v. Lamer Burke and Anothers  – இங்கிலாந்தின் டொமினியன் நாடாக இருந்த ரொடேசியாவின் 1961 ம் ஆண்டின் அரசியலமைப்பில் தனி நபர் சுதந்திரம் பாதிப்புறுமாறான சட்டங்களை இயற்ற முடியாது என்று கூறப்பட்டிருந்தது. அதே வேளை 1965 ரொடேசியா பிரதமர் புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்து தன்னிச்சையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இந் நிலையில் அவசர காலச் சட்டம் நிறைவேற்றபட்டு வழக்காளியின் கணவன் கைது செய்யபட்டு இருந்தார். வழக்காளி இச் சட்டத்தின் வலிதுடமையைக் கேள்விகுட்படுத்தி இருந்தார். கீழ் நீதிமன்ற நீதிபதிகள் புதிய அரசியலமைபின் மூலம் நியமிக்கப்பட்டு அவர்களது தீர்ப்புக்கள் பழைய அரசியமைப்பின் கீழ் வந்த உயர் நீதிபதிகளால் ஏற்றுக் கொள்ளபட்டிருந்த விடயத்தைக் காரணம் காட்டி ரொடேசியாவின் உயர் நீதிமன்றம் அதன் வலிதுடமையை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் ஆட்சியை தக்க வைக்க முயலும் அரசின் சட்டங்கள் செல்லுபடியற்றது என்று கோமறைக் கழகம் தீர்ப்பழித்தது. இது முன்னைய இரு வழக்குகளுக்கும் மாற்றமானது எனபதை அவதானிக்கலாம்.
      4. Mitchell v. DPP – கிறந்டரா மேல் முறையீட்டு நீதிமன்றம் வினைத் திறனுக்கு மேலதிகமாக கிறன்நோமிற்க்கு மக்களின் பெருவரியான அபிமானம் இருக்க வேண்டும். அது ஜனநாகயம் அற்ற முறையினாலோ அல்லது அடக்குமுறையினாலோ வந்ததாக இருத்தலாகாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
      5. Asma Jilani V. Government of Punjab  – இவ்வழக்கில் கெல்சனின் கோட்பாடு முற்றாக நிராகரிக்கபட்டது. இருப்பின் இவ்வழக்குகள் முன்னை புரட்சிகர ஆட்சி மாற்றத்தின் பின்னரே தீர்பளிக்கபட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    15. கெல்சனின் கோட்பாடு ஒஸ்டினின் கட்டளைக் கோட்பாடில் காணப்பட்ட கடமைகளைச் சுமத்தும் சட்டங்கள், அதிகாரத்தை அளிக்கும் சட்டங்கள் என்பவற்றை உள்ளடக்காமை, சமஷ்டி முறைமைக்கான அங்கீகாரம் போன்ற குறைபாட்டிற்கான தீர்வாக இருப்பதை அவதானிக்கலாம்.
    16. கெல்சனின் கோட்பாடின் அடிப்படையில், சர்வதேச சட்டங்கள் அதன் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதால் அதை அமுல்படுத்துவதில் குறைபாடுகள் காணப்படுகிறது. எனவே அதன் வலிதுடமை கேள்விகுட்படுத்தபடுகிறது.
    17. விமர்சனம்
      1. கிறன்நோம் இன் வினைதிறன் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் யதார்த்தஅரசியலிலும் தங்கி இருப்பதால் கெல்சனின் கருதுகோள் கூறுவது போன்று சட்டம் தூய்மையானது அல்ல.
      2.  கிறன்நோம் இன் வினைதிறனை அளவிடும் முறைமை காணபடுவதில்லை.
      3. யதார்தத்தில் சட்டம்; வரலாறு, சமூகம், பொருளாதாரம், அரசியல் என்பவற்றில் தங்கியுள்ளது.
      4. கெல்சனின் கோட்பாடு, சட்டதின் ஆளுமையாக அரசயே கருதுகிறது. மாறாக பொது மக்களையோ அவர்கள் நலங்களையோ அல்ல. யதார்த்தத்தில் அவ்வாறு இல்லை.
      5. கெல்சனின் கோட்பாடு, அரச ஆட்சிகளுக்கு அங்கிகாரம் வழங்குகிறதே ஒழிய மக்கள் ஆணைக்கோ மக்களின் சட்டம் இயற்றும் அதிகாரத்திற்கோ அல்ல.

Disclaimer
This text prepared by a LLB (Level 6 / final year) student as a supplement for revision. Thus this may contain erroneous or inaccurate explanations. This is neither  substitute for lectures nor recommended readings, but shared in public domain for open discussions and common benefits.
Contribute & Include me in your prayers!
~Lawithaz.